முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2021-07-09 17:51 GMT
கோவை

கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். 

ஆய்வு கூட்டம்

கோவை மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக பேரூராட்சி செயல் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. 

இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி சுகாதாரமான குடிநீர் வழங்குதல், மழைநீர் வடிகால் அமைத்தல், சாலை வசதிகள், தெரு விளக்குகள் அமைத்தல், தனிநபர் இல்ல கழிப்பறை திட்டத்தின் கீழ் கழிப்பிடம் கட்டுதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தடுப்பு நடவடிக்கை 

கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இனிவரும் நாட்களில் தொற்று பாதிப்பை முழுவதுமாக குறைக்கும் வகையில் பேரூராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப் படுத்த வேண்டும். 

இதற்காக கொரோனா பரிசோதனை அளவை கூடுதலாக மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாகக் கண்டறிந்து, நோய் தன்மைக்கேற்ப மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

அபராதம் 

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சி பகுதிகளில் வீடு, வீடாக சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றித் திரிபவர்கள், முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்