கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள குமாரச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் காமேஷ் (வயது 33). இவர் கடந்த மே 18-ம் தேதி இரவு 8 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, புதிய இருளஞ்சேரி ஆலமரம் அருகே அரிவாளால் சராமரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2021-07-10 06:11 GMT
இதுதொடர்பாக மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையா வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணன் (30), கோபாலகிருஷ்ணன் (24), சேதுபதி (24), நாகராஜன் (29) உள்பட 8 பேரையும் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார். இந்த வழக்கில் தொடர்புடைய புதிய கமலக்கண்ணன் (30), கோபாலகிருஷ்ணன் (24) ஆகிய 2 பேரும் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அதே கொலை வழக்கில் தொடர்புடைய திருத்தணி தாலுகாவை சேர்ந்த சேதுபதி (24), நாகராஜன் என்ற குட்டி (29) ஆகிய 2 பேர் மீதும் கஞ்சா வழக்கு, அடிதடி வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதால், இவர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்