தடையை மீறி ஒகேனக்கல் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

ஒகேனக்கல்லில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

Update: 2021-07-10 18:24 GMT
பென்னாகரம்:

சுற்றுலா பயணிகள்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வர். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் பொது போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இருப்பினும் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தடையை மீறி மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். மேலும் அவர்கள் தடையை மீறி பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
தடையை நீக்க வேண்டும்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை நீடித்த போதிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கார்களை மடம் சோதனைச்சாவடியில் நிறுத்தி விட்டு பஸ் மூலம் ஒகேனக்கல் செல்கின்றனர். அவர்கள் மெயின் அருவி சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தடையை மீறி குளிக்கின்றனர். 
இதனைத் தொடர்ந்து மாமரத்துகடவு வழியாக பரிசலில் பயணம் செய்து தொம்பச்சிக்கல் மணல் திட்டு வரை பரிசலில் செல்கின்றனர். மேலும் அவ்வாறு பரிசலில் செல்லும் சுற்றுலா பயணிகள் முறையான முககவசம் மற்றும் பாதுகாப்பு உடை அணிவதில்லை. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.  ஒகேனக்கல்லை நம்பி உள்ள பரிசல் ஓட்டிகள், மீனவர்கள், சமையல் தொழிலாளர்கள், மசாஜ் தொழிலாளர்கள் வாழ்வாரத்தை இழந்து உள்ளனர். எனவே ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை நீக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்