கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வேண்டும் - பா.ஜ.க. செயற்குழுவில் தீர்மானம்

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வேண்டும் என பா.ஜ.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-07-11 12:30 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பண்ணைவயல் இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதீஷ் வரவேற்றார்.மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

கூட்டத்தில் காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கிய மத்தியஅரசுக்கு நன்றி. குறுவை சாகுபடிக்காக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு உடனே கடன் வழங்க வேண்டும். தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

நெல்லுக்கு கொள்முதல் நிலையங்கள் இருப்பதைபோல் தேங்காய்களுக்கும் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையாக தேங்காய் ஒன்றுக்கு ரூ.25 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தஞ்சை ஜெபமாலைபுரம் அருகே உள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கள்ளச்சந்தையில் கொரோனா தடுப்பூசி விற்கப்படுவதை தடுக்க வேண்டும்.ஆற்றுப்படுகைகளில் முறையற்ற வகையில் கனரக வாகனங்கள் மூலம் மணலை அள்ளி அண்டைமாநிலங்கள், மாவட்டங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள தமிழகஅரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் பஞ்சாட்சரம், துரைமுருகன், மாவட்ட பொருளாளர் விநாயகம், மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி, மாநில வக்கீல் அணி செயலாளர் ராஜேஸ்வரன், தொழில்நுட்பப்பிரிவு நிர்வாகி தங்கதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாநகர தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்