பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரியில் பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-11 15:29 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
காய்கறி வியாபாரி 
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் நாசர் (வயது 38). இவர் மொத்த காய்கறி கடை வைத்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காய்கறிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் காய்கறி வாங்கிய வகையில் நாசர் ஓசூர் வியாபாரிகளுக்கு ரூ.1 கோடி கொடுக்க வேண்டியது இருந்தது.
இதுகுறித்து நாசர், தனது கேஷியர் முத்துகுமரனிடம் கூறினார். அப்போது அவர், ரூ.80 லட்சம் தயார் செய்து கொடுங்கள். தனக்கு பணத்தை இரட்டிப்பாக்கி தரும் நபர்களை தெரியும். ரூ.1 கோடி வாங்கி தருகிறேன் என கூறினார். அதை நம்பி நாசர் ரூ.70 லட்சம் தயார் செய்து முத்துகுமரனிடம் கொடுத்தார்.
6 பேர் கைது 
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் வைத்து ரூ.70 லட்சத்தை கொடுக்க முயன்ற போது 2 பேர் அந்த பணத்தை வாங்கி கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து மகாராஜகடை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் பணத்தை இரட்டிப்பாக்க கும்பல் வந்ததும், வந்த இடத்தில் 2 பேர் ரூ.70 லட்சத்துடன் தப்பி ஓடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து பணம் இரட்டிப்புக்காக வந்த தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ராஜேஷ், மோகன்ராஜ், ஜெயகுமார், முத்துகுமரன், காமராஜ், நாசர் ஆகிய 6 பேரை கடந்த 4-ந் தேதி மகாராஜகடை போலீசார் கைது செய்தனர். ரூ.70 லட்சத்துடன் தப்பி ஓடிய நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கருமபாளையம் பகுதியை சேர்ந்த பண்டாரி, காஞ்சீபுரத்தை சேர்ந்த அபுபக்கர் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.
மேலும் ஒருவர் பிடிபட்டார் 
இந்த நிலையில் பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் தலைமறைவான பண்டாரியை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த அபுபக்கரை தேடி வருகிறார்கள். இவர்களிடம் விசாரணை நடத்திய பிறகே இவர்கள் தமிழகத்தில் இதே போல வேறு எங்கெல்லாம் ஏமாற்றி உள்ளார்கள் என்ற விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்