புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை

கோத்தகிரி அருகே பெற்றோர் வீட்டில் இருந்து மனைவி வர மறுத்ததால் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-11 19:28 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே பெற்றோர் வீட்டில் இருந்து மனைவி வர மறுத்ததால் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

புதுமாப்பிள்ளை 

கோவை புலியகுளம் தாமு நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 27), கூலி தொழிலாளி. இவருக்கும் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு மடியாடா என்ற கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி (21) என்பவருக்கும் கடந்த மே மாதம் 23-ந் தேதி கோத்தகிரியில் வைத்து திருமணம் நடந்தது. 

பின்னர் இருவரும் கோவைக்கு வந்து குடும்பம் நடத்தினார்கள். இந்த நிலையில் கடந்த வாரத்தில் ஆர்த்தி தனது பெற்றோரை பார்க்க வேண்டும் போல உள்ளது, எனவே தன்னை கோத்த கிரிக்கு அழைத்து செல்லுமாறு கணவரிடம் கூறி உள்ளார்.

பெற்றோர் வீட்டிற்கு சென்றாா்

இதையடுத்து ரஞ்சித்குமார் தனது மனைவியை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். அங்கு சென்றதும் நான் இங்கு ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு வருகிறேன் என்று ஆர்த்தி கூறியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவர் தனது மனைவியை அங்கு விட்டுவிட்டு கோவை திரும்பினார். 

பின்னர் ஆர்த்தி தனது கணவருக்கு போன் செய்து தனது வீட்டிற்கு வருமாறு அழைத்து உள்ளார். அதன்படி ரஞ்சித்குமார் தனது மனைவி வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் தனது மனைவியிடம் கோவைக்கு செல்லலாம் என்று கூறி உள்ளார். 

விஷம் குடித்து தற்கொலை 

அதற்கு ஆர்த்தி, தனது பெற்றோரை விட்டு பிரிந்து கோவைக்கு வர விருப்பம் இல்லை என்று கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த ரஞ்சித்குமார் விஷம் வாங்கி குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்தார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். 

போலீசார் விசாரணை 

இது குறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
திருமணமாகி 1½ மாதத்தில் மனைவி தனது வீட்டிற்கு வர மறுத்ததால் புதுமாப்பிள்ளை  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்