கன்னியாகுமரி கடல் பகுதியில் ‘சஜாக்’ ஆபரேஷன்

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடல் பகுதியில் சஜாக் ஆபரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

Update: 2021-07-12 20:27 GMT
கன்னியாகுமரி:
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடல் பகுதியில் ‘சஜாக்’ ஆபரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. 
பாதுகாப்பு ஒத்திகை
கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள பகுதியாகும். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவற்றை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கன்னியாகுமரி கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் ‘சஜாக்’ஆபரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்துவது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கால் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவில்லை. 
3 மாதங்களுக்கு பிறகு
இந்தநிலையில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சார்பில் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இதில் ஒரு படகில் சின்னமுட்டத்தில் இருந்து உவரி வரையும், மற்றொரு படகில் குளச்சல் நீரோடி காலனி வரை 2 குழுக்களாக பிரிந்து அதிநவீன ரோந்து படகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  
இந்த பாதுகாப்பு ஒத்திகை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. 
கடற்கரை கிராமங்களில் ரோந்து
இதேபோல், குமரி மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் போலீசார் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு சொந்தமான சின்னமுட்டம், மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம், கூட்டப்புளி, உவரி உள்பட 9 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.  இந்த பாதுகாப்பு ஒத்திகை கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் நடந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், நம்பியார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுடலைமணி, தியாகராஜன் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஆகியோர் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்