மயிலாடும்பாறை அகழாய்வில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள் கண்டுபிடிப்பு

மயிலாடும்பாறை அகழாய்வில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-13 16:16 GMT
கிருஷ்ணகிரி,

தொகரப்பள்ளி அருகே உள்ள மயிலாடும்பாறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் அகழாய்வு தொடங்கப்பட்டது. தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல், அலுவலர்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா மற்றும் சென்னையை சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் ஈடுபட்டனர். இந்த அகழாய்வின் போது, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்திட்டையில் 70 சென்டி மீட்டர் நீளம் உள்ள இரும்பு வாள் ஒன்றை கண்டுபிடித்தனர். இது குறித்து அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறியதாவது:- 
பர்கூர் தாலுகா மயிலாடும்பாறையில், சானரப்பன் மலையில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் கீழ் 30-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இங்கு கிடைக்கும் பொருட்களை டி.என்.ஏ. பரிசோதனை செய்து, அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறை கண்டறியப்படவுள்ளது. தற்போது இங்கு பெருங்கற்காலத்தை சேர்ந்த, 70 சென்டி மீட்டர் நீளமுள்ள இரும்பு வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது வாளின் 40 சென்டி மீட்டர் முனைப்பகுதி மட்டுமே வெளியே எடுக்கப்பட்டுள்ளது. வாளின் கைப்பிடி பகுதியை இன்னும் எடுக்கவில்லை. இந்த வாளை ஒரு மண் திட்டை அமைத்து அதன்மேல் வைத்துள்ளனர். இந்த வாள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. இதுகுறித்த முடிவுகள் வந்த பிறகுதான் இந்த வாளின் சரியான காலத்தை கணிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்