அமலுக்கு வந்த கூடுதல் தளர்வுகள்: கடைகள் இரவு 9 மணி வரை திறக்கப்பட்டன

தமிழகத்தில் ஊரடங்கு நேர கூடுதல் தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. மாநிலம் முழுவதும் கடைகள் இரவு 9 மணி வரை திறக்கப்பட்டன.

Update: 2021-07-13 17:12 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பாதிப்பின் அடிப்படையில் 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படும்போதும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது 9-வது முறையாக வருகிற 19-ந்தேதி (காலை 6 மணி) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

அந்தவகையில் இந்த தடவை அறிவிக்கப்பட்ட தளர்வுகள், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகளாக அறிவிக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அறிவிக்கப்பட்ட அந்த தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.

புதுச்சேரிக்கு பஸ் சேவை

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்துக்கு கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று முதல் பஸ் போக்குவரத்து செயல்பட தொடங்கியது.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 50 சதவீத பயணிகளுடன் நேற்று முதல் புதுச்சேரி நோக்கி அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. ஏ.சி. பஸ்களில் குளிர்சாதன வசதி செயல்படுத்தப்படவில்லை. பயணிகள் முககவசம் அணிந்தும், கைகளில் ‘சானிடைசர்’ தெளிக்கப்பட்ட பின்னரே பஸ்களில் ஏற அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை கடலூர்-சென்னை இடையே புதுச்சேரி வழியாகவே இதுவரை பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதின் எதிரொலியாக கடலூரில் இருந்து சென்னைக்கு புதுச்சேரி வழியாகவே நேற்று முதல் பஸ்கள் புறப்பட்டு சென்றன.

கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு

அதேவேளை ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகள், நடைபாதை கடைகள், இனிப்பு-காரவகை பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் வழக்கமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டன. அதன்படி கடைகள் நேற்று இரவு 9 மணி வரை செயல்பட்டன.

கடைகளின் நுழைவுவாயில்கள் முன்பு ‘சானிடைசர்’ கட்டாயம் வைக்கப்பட வேண்டும், கைகளில் ‘சானிடைசர்’ தெளிக்கப்பட்டு, ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி கொண்டு வெப்ப பரிசோதனை நடத்திய பின்னரே வாடிக்கையாளர்களை கடைகளில் அனுமதிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் நேற்று தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

தொடரும் தடைகள்

அதேவேளை மாநிலங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசு பஸ் போக்குவரத்து (புதுச்சேரி தவிர்த்து), மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்து, தியேட்டர்கள், ‘டாஸ்மாக்’ மதுக்கடை ‘பார்’கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காங்கள் ஆகியவற்றுக்கான தடை தொடர்கிறது.

மேலும் செய்திகள்