திருக்கோவிலூர் அருகே பரபரப்பு மனைவி மாமியார் கடப்பாரையால் அடித்துக் கொலை

திருக்கோவிலூர் அருகே குடும்ப பிரச்சினையில் மனைவி மாமியாரை கடப்பாரையால் அடித்துக்கொலைசெய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-07-14 17:43 GMT

திருக்கோவிலூர்

ஆட்டோ டிரைவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த தேவியகரம் கச்சிக்குச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(வயது 48). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி மகாலட்சுமி(33). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். 
இந்த நிலையில் மகாலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த முருகன் அவரிடம் அவ்வப்போது தகராறு செய்து வந்தார். இதில் கணவரிடம் கோபித்துக்கொண்டு மகாலட்சுமி அவரது தாய் வீட்டுக்கு சென்று விடுவதும் பின்னர் உறவினர்கள் கணவன்-மனைவியை  சமாதானம் செய்து வைப்பதும் அடிக்கடி நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

தகராறு

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதை அடுத்து மகாலட்சுமி கோபித்துக்கொண்டு முருக்கம்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கடந்த 9-ந் தேதி திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் கொடுத்தார். 
அதன் பேரில் போலீசார் கணவன்-மனைவி இருவரையும் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். 

சேர்ந்து வாழ மறுப்பு

அப்போது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறிய மகாலட்சுமி அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். 
இந்த நிலையில்  முருகன் நேற்று முன்தினம் இரவு முருக்கம்பாடிக்கு சென்று மகாலட்சுமியிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததோடு அவரிடம் உள்ள நகைகளையும் தருமாறு கேட்டார். ஆனால் குடும்பம் நடத்த வர மறுத்த மகாலட்சுமி நகைகளையும் தர மறுத்துவிட்டார். 

கடப்பாரையால் தாக்கினார்

இதில் ஆத்திரமடைந்த முருகன், கடப்பாரையால் அவரது தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த மகாலட்சுமி கூச்சல் எழுப்பியபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். 
இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது குழந்தை மோனிஷா(11), மாமியார் சரோஜா(50) ஆகியோரையும் முருகன் கடப்பாரையால் தாக்கியதால் அவர்களும் படுகாயங்களுடன் வலிதாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தனர். இவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி வந்தனர். ஊர்மக்கள் திரண்டு வருவதை பார்த்ததும் முருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

மனைவி, மாமியார் சாவு

பின்னர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகாலட்சுமி, சரோஜா, மோனிஷா ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரோஜா சிகிச்சை பலன் இன்றி இறந்தார். மோனிஷாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கைது

இந்த இரட்டை கொலை பற்றி தகவல் அறிந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். 
மேலும் மனைவி, மாமியாரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய முருகனை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மணலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்தனர்.  தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.  குடும்ப பிரச்சினையால் மனைவி, மாமியாரை ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்த சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்