10 மாதங்களுக்கு பின்பு துப்புதுலங்கியது: மாயமான ராமேசுவரம் வாலிபரை கொன்று புதைத்தது அம்பலம் எலும்புக்கூடு மீட்பு: நண்பர்கள் கைது

ராமேசுவரத்தில் 10 மாதங்களுக்கு முன்பு மாயமான வாலிபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-16 06:42 GMT
ராமேசுவரம், 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் சின்னவன்பிள்ளை தெருவை சேர்ந்தவர் மணிராஜா. இவருடைய மகன் கணேஷ்ராஜ் (வயது 19). இவர் ஆட்டோ ஓட்டி வந்தார்.

இந்தநிலையில் கணேஷ்ராஜ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து ராமேசுவரம் நகர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியும் தகவல் இல்லாததால், பின்னர் ராமேசுவரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேஷ்ராஜ் மாயம் குறித்து அவருடைய தாத்தா சுரேஷ் ராமநாதபுரம் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டை சந்தித்தும் மனு கொடுத்தார். பின்னர் இதுபற்றி தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையில் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

போலீசார் கணேஷ்ராஜின் செல்போன் எண்ணில் பேசியவர்கள், அவர் காணாமல் போன தேதியன்றும், அதற்கு முந்தைய நாட்களிலும் யார், யாரிடம் பேசியுள்ளார் என்பதை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் துப்பு துலங்கியதையடுத்து கணேஷ்ராஜின் நெருங்கிய நண்பர்கள் ராமேசுவரம் ஸ்ரீராம் நகரை சேர்ந்த முத்துசேரன் (வயது 23), பாரதி நகரைச் சேர்ந்த மைக்கேல்அஜித் (25), உச்சிப்புளி தோப்புவலசையை சேர்ந்த அஜித் குமார்வயது (25) ஆகிய 3 பேரையும் பிடித்தனர். இதை அறிந்ததும் தப்பி ஓடிய சதீசை தேடிவருகின்றனர். பின்னர் பிடிபட்டவர்களிடம் தனித்தனியாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அஜித்குமார், முத்துசேரன் ஆகிய 2 பேரும் கடந்த செப்டம்பர் மாதம் ராமேசுவரம் மல்லிகை நகர் பகுதியில் உள்ள ஒருவரிடம் கஞ்சா வாங்குவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் 2 பேரையும் அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ், நண்பரான கணேஷ்ராஜ் உள்ளிட்ட சிலர் சேர்ந்து தாக்கி உள்ளனர்.

இதில் காயம் அடைந்த அஜித்குமார் மற்றும் முத்துசேரன் ஆகியோர் ஆத்திரம் அடைந்து கணேஷ்ராஜை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். இதையடுத்து சம்பவத்தன்று மதியம் கணேஷ்ராஜிக்கு போன் செய்து ராமேசுவரம் செம்மமடம் பகுதிக்கு வரச்சொல்லி அழைத்துள்ளனர். அன்று மாலை செம்மமடம் அருகே தண்டவாள பாதையைத் தாண்டி மணல் மேடு பகுதியில் அமர்ந்து கணேஷ்ராஜ், முத்துசேரன், அஜித்குமார், மைக்கேல் அஜித், சதீஷ் ஆகிய 5 பேரும் மது அருந்தி, கஞ்சா புகைத்துள்ளனர். கணேஷ்ராஜ் போதையில் இருந்த போது, சதீஷ், அஜித்குமார், மைக்கேல்அஜித் ஆகிய 3 பேரும் சேர்ந்து கணேஷ்ராஜை கம்பியால் கொடூரமாக தாக்கி உள்ளனர்.

பின்னர் முத்துச்சேரன் கழுத்தை இறுக்கி பிடித்து அரிவாளால் கணேஷ்ராஜ் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் முன்கூட்டியே திட்டமிட்டு தோண்டி வைத்திருந்த குழியில் உடலைப்போட்டு மூடிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

எனவே கைது செய்யப்பட்ட முத்துசேரன், அஜித்குமார், மைக்கேல் அஜித் ஆகியோரை போலீசார், செம்மமடம் பகுதிக்கு அழைத்து வந்தனர். புதைத்த இடத்தை போலீசாரிடம் அடையாளம் காட்டினர். அந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் ராமேசுவரம் தாசில்தார் அப்துல் ஜப்பார், வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேசியஸ் ஆகியோர் முன்னிலையில் அந்த இடம் தோண்டப்பட்டது. அரசு மருத்துவமனை டாக்டர்கள் முல்லைவேந்தன், துளசிபிருந்தா ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர், கணேஷ்ராஜின் உடல் எலும்புக்கூடு மற்றும் பாகங்களை மீட்டு ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர்.

இதற்கிடையே மகன் எலும்புக்கூடாக மீட்கப்பட்டதை பார்த்து கணேஷ்ராஜின் தாய் உஷா கதறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எனது மகன் காணாமல் போனது குறித்து கடந்த ஆண்டு ராமேசுவரம் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதன்பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினோம். அதன் பின்னர்தான் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் ெதாடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடு்க்க வேண்டும். கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்