தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் 19-ந் தேதி ஊரடங்கு உத்தரவு முடிவடையும் நிலையில் அதை கூடுதல் தளர்வுகளுடன் மீண்டும் நீட்டிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

Update: 2021-07-16 14:02 GMT
சென்னை,

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், படிப்படியாக தளர்வுகளை அமல்படுத்தி ஊரடங்கு உத்தரவை வாராவாரம் அரசு நீட்டித்து வருகிறது. அந்த வகையில் 19-ந் தேதி காலை 6 மணியோடு தற்போதைய ஊரடங்கு உத்தரவு நிறைவடைகிறது.

எனவே மீண்டும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், அந்த காலகட்டத்தில் மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்க அரசு ஆலோசனை நடத்த உள்ளது.

இன்று ஆலோசனை

இதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

அடுத்த வார ஊரடங்கு காலகட்டத்தில் மேலும் என்னென்ன தளர்வுகளை வழங்கலாம்? தொற்று அதிகரிக்கும் சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்பது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

விரைவில் அறிவிப்பு

மேலும், திரையரங்குகள், நட்சத்திர விடுதியில் இயங்கும் மதுக்கூடங்கள் இயங்க அனுமதி அளிக்கலாமா? இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இதுவரை திறக்க அனுமதி இல்லாத சூழலில் அவற்றை படிப்படியாக தொடங்கும் சூழ்நிலை உள்ளதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்.

மேலும் செய்திகள்