தடுப்பூசி மையங்களில் மருந்து இருப்பு விவரத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்

கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிமருந்து டோஸ்இருப்பு விவரங்களையும் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரங்களையும் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-17 17:00 GMT
விருதுநகர், 
கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிமருந்து டோஸ்இருப்பு விவரங்களையும் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரங்களையும் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரவு
 இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- தடுப்பூசி மையங்கள் தற்போதைய நிலையில் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட வருபவர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.
 இந்த டோக்கனில் வரிசை எண் குறிப்பிடப்பட வேண்டும். தடுப்பூசி மருந்து இருக்கும் அளவிற்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போட வருபவர்கள் தடுப்பூசி போட முடியாமல் திரும்பவும்வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த அசவுகரியத்தை குறைப்பதற்காக கீழ்காணும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 
டோக்கன் 
தடுப்பூசி போட மையங்களுக்கு வருகிறவர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாளில் தடுப்பூசிபோட முடியாதவர்கள் அடுத்த நாளோ அல்லது அதற்கு அடுத்தடுத்த நாளோ வருமாறு அறிவுறுத்தப்பட்ட வேண்டும். குறிப்பிட்ட நாளில் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்ற விவரத்தையும் வரிசைஎண் விவரத்தையும் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.
முன்னுரிமை 
முதியவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இதேபோன்று 2-வது தவணை தடுப்பூசிபோட வேண்டியவர்கள் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வயது முதிர்ந்த பெரியவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 
தடுப்பூசி மையங்களில் பொது மக்களுக்கு தெரியும் வகையில் தடுப்பூசி மருந்து இருப்பு விவரம் மற்றும் தடுப்பூசி போட்டவர்களின் வரிசை எண் விவரம் ஆகியவற்றை அறிவிப்பு பலகையில் கண்டிப்பாக வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்