கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் காட்டாத மக்கள்

மழை மற்றும் விடுமுறை நாள் என்பதால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தடுப்பூசியுடன் அலுவலர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

Update: 2021-07-18 15:42 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 78 ஆயிரத்து 396 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 186 பேர் முதல் தவணையும், 80 ஆயிரத்து 210 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
அதன்படி நேற்றும் அரசு மருத்துவமனைகள், அண்ணா விளையாட்டு மைதானம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 42 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இதில் கோவிஷீல்டு மட்டுமே செலுத்தப்பட்டது. ஆனால் நேற்று காலை மழை பெய்ததாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும்  பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டம் இல்லை.
இதேபோல் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு தடுப்பூசி போட மக்கள் அதிக அளவில் வரவில்லை. மிக குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே வந்தனர்.

காத்திருப்பு

இதனால் அலுவலர்கள் சில நேரம்  யாரும் இல்லாத நிலையில். அவர்கள் பொதுமக்கள் வருகைக்காக தடுப்பூசியுடன் காத்திருந்தனர். ஒவ்வொருவராக வர, வர தடுப்பூசி போட்டனர். அண்ணா விளையாட்டு மைதானத்தில் 300 கோவிஷீல்டு நேற்று இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மாவட்டம் முழுவதும் நேற்று 646 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். வழக்கமாக 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் நிலையில், நேற்று மிக குறைந்த அளவில் தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்