கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தது: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2021-07-18 16:17 GMT
பென்னாகரம்:
கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கனமழை
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பெங்களூரு, குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களிலும், வட கர்நாடக மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதனிடையே நேற்று முன்தினம் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 435 கன அடி நீரும் என மொத்தம் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 17 ஆயிரத்து 435 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 6 மணிக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.
இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்க கூடாது என்று அறிவுறுத்தினர். மேலும் தமிழகத்தில் காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை படகில் சென்று அளவிட்டு கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்