தம்பதி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது

பொம்மிடி அருகே தம்பதி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-18 16:23 GMT
பொம்மிடி:
பொம்மிடி அருகே தம்பதி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தம்பதி கொலை
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 80). விவசாயி. இவருடைய மனைவி சுலோசனா (75). ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர்கள் 2 பேரையும் கடந்த 12-ந்தேதி இரவு மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் பில்பருத்தி கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் (20), முகேஷ் (19), பிரகாஷ்ராஜ் (19), வேலவன் (24), சந்துரு (22), எழிலரசன் (26) ஆகிய 6 பேர் வயதான தம்பதியை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து ஹரிஷ், முகேஷ், பிரகாஷ்ராஜ் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து தாலிக்கொடி, கம்மல், 3 செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 
மேலும் 3 பேர் கைது
இவர்களில் முகேஷ் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டும், ஹரிஷ் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆர்த்தோ படித்து வந்ததும், வேலவன் அ.தி.மு.க. பிரமுகர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேரையும் தனிப்படை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அரூர் சிறையில் அடைத்தனர். 
மேலும் தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. பிரமுகர் வேலவன், சந்துரு, எழிலரசன் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். தம்பதி கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த வேலவன், சந்துரு, எழிலரசன் ஆகிய 3 பேரும் பொம்மிடி பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். 
சிறையில் அடைப்பு
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சந்துரு எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததும், எழிலரசன் லாரி டிரைவர் என்பதும் இந்த கொலைக்கு அ.தி.மு.க. பிரமுகரான வேலவன் முக்கிய நபராக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட வேலவன் உள்பட 3 பேரையும் தனிப்படை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்