கூடுதல் கமிஷன் தருவதாக ஏமாற்றி வங்கி முகவரிடம் ரூ.90 லட்சம் கொள்ளை மோசடி ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு

சென்னையில் கூடுதல் கமிஷன் தருவதாக கூறி ஏமாற்றி வங்கி முகவரிடம் ரூ.90 லட்சம் கொள்ளையடித்த ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-07-18 22:58 GMT
சென்னை,

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் ஞானதுரை (வயது 30). இவர், தனியார் வங்கி ஒன்றில் முகவராக பணியாற்றி வருகிறார். வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்று வங்கியில் செலுத்தி, குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்று வந்தார். அந்தவகையில் அவர், 70 வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.90 லட்சத்தை வசூலித்து, வங்கியில் செலுத்த வைத்திருந்தார்.

இந்தநிலையில் சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்த மதபோதகர் பாலன் (41), தனியார் நிதி நிறுவனத்தின் இடைத்தரகர் வேலாயுதம் (55) ஆகியோர் ஆல்வின் ஞானதுரையிடம் அறிமுகமானார்கள்.

ஆசைவார்த்தை

அவர்கள், ஆல்வின் ஞானதுரையிடம், வங்கியில் செலுத்த வைத்திருக்கும் பணத்தை எங்களுக்கு தெரிந்த ராயப்பேட்டையை சேர்ந்த நவாஷ் என்பவரிடம் கொடுத்தால், வங்கியில் தருவதைவிட கூடுதலாக 5 சதவீதம் கமிஷன் தொகை பெற்றுத்தருவதாக தெரிவித்தனர்.

அவர்களது ஆசை வார்த்தையை நம்பி, ஆல்வின் ஞானதுரை ரூ.90 லட்சத்தை எடுத்துக்கொண்டு ராயப்பேட்டையில் நவாசை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அவருடன் பாலன், வேலாயுதம் ஆகிய 2 பேரும் சென்றிருந்தனர்.

ரூ.90 லட்சம் கொள்ளை

நவாஷ், பணத்தை எண்ணி சரிபார்த்துவிட்டு வருவதாக கூறி அலுவலகத்தின் கீழ் தளத்துக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. அதன்பிறகுதான் ஆல்வின் ஞானதுரை தான் ஏமாற்றப்பட்டதையும், ரூ.90 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதையும் உணர்ந்தார். இதுகுறித்து ஐஸ்அவுஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இந்த நூதன கொள்ளை சம்பவத்தில் பாலன், வேலாயுதம் ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து அவர்களை போலீஸ்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பணத்துடன் தலைமறைவாகி உள்ள நவாசை போலீசார் தேடி வருகிறார்கள். நவாஷ் அரசியல் கட்சி ஒன்றை நடத்தி, அதன் தலைவராக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்