வால்பாறை மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்

வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

Update: 2021-07-19 17:52 GMT
வால்பாறை

வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

வால்பாறை 

மலைப்பிரதேசமான வால்பாறையில் கூழாங்கல் ஆறு, சோலையார் அணை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி உள்பட ஏராளமான சுற்றுலா மையங்கள் உள்ளன. கொரோனா பரவல் காரணமாக வால்பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது தொற்று குறைந்து வருவதால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.

வருகை அதிகரிப்பு 

மேலும் இங்கு காலநிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து வருவதால் ஆங்காங்கே பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த சீதோஷ்ண நிலையை பார்த்து மகிழ்வதற்காக இருசக்கர வாகனங்களில் இங்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. 

கடந்த சில மாதங்களாக ஆழியாறு-வால்பாறை மலைப்பாதையில் குறைவான வாகனங்களே சென்று வந்தன. தற்போது சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து இருப்பதால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. 

போக்குவரத்து நெரிசல் 

அவர்கள் மலைப்பாதையில் ஆங்காங்கே சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி, இயற்கை காட்சிகளை பார்த்து மகிழ்கிறார் கள். அத்துடன் சிலர் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதும் இல்லை. இதன் காரணமாக மலைப்பாதையில் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இங்குள்ள 9-வது கொண்டை ஊசி அருகே  கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால்  அரை மணி நேரம் நீண்ட வரிசையில் சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் காத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.  

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

ரோந்து பணி 

தற்போது இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. வாகனங்களில் வருபவர்கள் மலைப்பாதைக்கான போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது இல்லை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

எனவே போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு, இங்கு ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதுடன், சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்