மண் சரிவில் சிக்கிய வாலிபர் உயிருடன் மீட்பு

உவரியில் மண் சரிவில் சிக்கிய வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார்.

Update: 2021-07-20 19:55 GMT
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் உவரி மேலத்தெரு பகுதியில் புதிதாக கட்டி வரும் ஒருவரது வீட்டில் கழிவு நீர் (செப்டி டேங்) உறை கிணறு அமைக்கும் பணி நேற்று காலை நடைபெற்றது. சுமார் 15 அடி ஆழம் உள்ள குழியில் குமரி மாவட்டம் பறக்கை மதுசூதனபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் பிரவீன் (வயது 27) என்பவர் உறை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். 
அப்போது எதிர்பாராத விதமாக அங்கு மண்சரிவு ஏற்பட்டது. இதில் பிரவீன் கழுத்தளவு வரை மணல் மூடியது. அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை, வள்ளியூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மண் சரியாதபடி அவரை சுற்றி பிளாஸ்டிக் டிரம் வைத்தனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் இருந்த மண் தோண்டப்பட்டு பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு மூலம் பிரவீனை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீயணைப்பு வீரர்களை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார், உதவி அலுவலர் சுரேஷ் ஆனந்த் ஆகியோர் நேரில் பாராட்டினர். 

மேலும் செய்திகள்