எடியூரப்பாவுடன் 30 மடாதிபதிகள் சந்திப்பு; நேரில் ஆதரவு தெரிவித்தனர்

முதல்-மந்திரியை மாற்றும் விவகாரத்தில் எடியூரப்பாவை 30-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவரை எக்காரணம் கொண்டும் நீக்கக்கூடாது என்று அவர்கள் கூறினர்.

Update: 2021-07-20 20:44 GMT
பெங்களூரு: முதல்-மந்திரியை மாற்றும் விவகாரத்தில் எடியூரப்பாவை 30-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவரை எக்காரணம் கொண்டும் நீக்கக்கூடாது என்று அவர்கள் கூறினர்.

எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம்

கர்நாடக சட்டசபைக்கு கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஆனால் அந்த கவர்னர் வஜூபாய் வாலா அவசர அவசரமாக எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா மூன்றே நாட்களில் ராஜினாமா செய்தார். அதன் பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். குமாரசாமி 14 மாதங்கள் ஆட்சி செய்த நிலையில் இரு கட்சிகளின் 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

பா.ஜனதா மேலிடம் தயங்கியது

அதன் பிறகு கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். அப்போதே 75 வயதை தாண்டிவிட்டதால் எடியூரப்பாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் தயங்கியது. பா.ஜனதாவில் 75 வயது நிரம்பியவர்களுக்கு தேர்தல் அரசியலில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால் எடியூரப்பாவுக்கு மட்டுமே அதில் இருந்து சிறிது விலக்கு அளிக்கப்பட்டது. அப்போது பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவிடம், 2 ஆண்டுகள் மட்டுமே முதல்-மந்திரி பதவியில் நீடிக்க அனுமதிக்கப்படும் என்ற நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எடியூரப்பா ஆட்சி பொறுப்பேற்று வருகிற 26-ந் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து கடந்த 16-ந் தேதி டெல்லிக்கு சென்ற எடியூரப்பா அங்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். அவர்கள், எடியூரப்பாவிடம் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுமாறு கூறியதாக தகவல் வெளியானது.

ஆதரவாளர்கள் அதிர்ச்சி

ஆனால் இந்த தகவலை எடியூரப்பா முற்றிலுமாக மறுத்தார். ஆயினும், எடியூரப்பா பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், பேசியதாக வெளியான ஆடியோ உரையாடலில், எடியூரப்பா பதவி விலக உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்வது உறுதி என்றே கூறப்படுகிறது. இதனால் எடியூரப்பா ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது காவேரி இல்லத்தில் 30-க்கும் மேற்பட்ட லிங்காயத்-வீரசைவ சமூகத்தை சேர்ந்த மடாதிபதிகள் நேற்று நேரில் சந்தித்து பேசினர். இந்த மடாதிபதிகள் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். பதவியை ராஜினாமா செய்வதாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்து எடியூரப்பாவிடம் அவர்கள் கேட்டறிந்தனர். அதன் பிறகு மடாதிபதி திங்கலேஷ்வரா சுவாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

500 மடாதிபதிகள்

நாங்கள் எடியூரப்பாவை நேரில் சந்தித்து, பதவி விலகுவதாக வெளியாகி வரும் தகவல் குறித்து கேட்டோம். அதற்கு அவர், கட்சி மேலிடம் கூறும் முடிவை ஏற்க வேண்டிய நிலையில் உள்ளேன். கட்சி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை என்று கூறினார். இதை தவிர அவர் வேறு எந்த தகவலையும் கூறவில்லை. எடியூரப்பா லிங்காயத் சமூகத்தின் தலைவர் மட்டுமல்ல, அவர் அனைத்து சமூகங்களின் தலைவராக திகழ்கிறார்.
அவரை இன்னும் 2 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை அவரை நீக்கினால் கர்நாடகத்தில் பா.ஜனதா அழிந்துவிடும். இன்னும் 2, 3 நாட்களில் பெங்களூருவில் 500 மடாதிபதிகள் கூடி நாங்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளோம். எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் இருக்கும்போது தான் அவரை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. அவருக்கு மட்டும் அநீதி இழைப்பது ஏன் என்று தெரியவில்லை.

மோசமான நோக்கம்

எடியூரப்பாவை நீக்குவதின் பின்னணியில் ஒரு மோசமான நோக்கம் உள்ளது. பா.ஜனதா மேலிடம் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். எடியூரப்பா அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து அமல்படுத்தியுள்ளார்.
இவ்வாறு திங்கலேஷ்வரா சுவாமி கூறினார்.

ஆட்சி தலைமை மாற்றம்

பெஜாவர் மடாதிபதி விசுவபிரசன்ன தீர்த்த சுவாமி கூறுகையில், "முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவது சரியான நடவடிக்கை அல்ல. அந்த பதவியில் அவரை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும். அவர் நல்ல பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். இந்த நேரத்தில் ஆட்சி தலைமை மாற்றம் என்பது சரியல்ல" என்றார்.

மேலும் செய்திகள்