போதை ஊசி கும்பலை சேர்ந்த தாய், மகன் உள்பட 5 பேர் கைது

கோவையில் போதை ஊசி கும்பலை சேர்ந்த தாய்,மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-20 21:28 GMT
போத்தனூர்

கோவையில் போதை ஊசி கும்பலை சேர்ந்த தாய்,மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போதை ஊசி கும்பல்

கோவை பகுதியில் போதை ஊசி செய்யப்படுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் வாலிபர்கள் சிலர் போதை ஊசி போட்டுக்கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில், தெற்கு உதவி கமிஷனர் ரகுபதி ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து போதை ஊசி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

 இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி போதை ஊசி கும்பலை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். 

தாய், மகன் உள்பட 5 பேர் கைது

இந்த நிலையில் கோவை குறிச்சி பகுதியில் சிலர் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது போலீசாரை பார்த்தும் 3 பேர் தப்பியோடினர். அவர்களை போலீசார் துரத்தி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் அவர்கள் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ரசீது (வயது 33). போத்தனூர் பாரதிநகரை சேர்ந்த சித்திக் (29), குனியமுத்தூரை சேர்ந்த லத்தீப் (26) என்பதும், போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 

இதேபோல ஆத்துப்பாலம் பகுதியில் போதை ஊசி விற்பனை செய்து கொண்டிருந்த சதாம் நகரை சேர்ந்த பானு (52), அவருடைய மகன் ரியாஸ் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  தொடர்ந்து கைதான 5 பேரிடமும் இருந்து 210 போதை மாத்திரைகள், போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வலைவீச்சு

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கிருமி நிசார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவரது வீட்டில் சோதனை செய்தபோது, 150 போதை மாத்திரைகள் இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்