மின்சார வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி கிராம மக்கள் மறியல்

மின்சார வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார். இதையடுத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-21 01:19 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கொமக்கம்பேடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 60). விவசாயி. இவரது நிலம் கொமக்கம்பேடு கிராமம் மன்னார் சாமிதோப்பு பகுதியில் உள்ளது. நேற்று காலை தனது நிலத்திற்கு ராமலிங்கம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

கொமக்கம்பேடு மெயின் ரோட்டில் இருந்து மன்னார் சாமிதோப்பு சாலையில் திரும்பியபோது உயரழுத்த மின்சார வயர் ஒன்று கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர்.

சாலை மறியல்

மேலும், இது குறித்து பாலேஸ்வரம் துணை மின் நிலையத்தில் உள்ள மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திருநின்றவூர்- தாமரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இறந்து போன ராமலிங்கத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மின்வாரியத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆங்காங்கே மின்சார வயர்கள் தொங்கி கொண்டிருப்பதை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் ராமலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்

மின்சாரம் தாக்கி இறந்த ராமலிங்கத்துக்கு மல்லிகா என்ற மனைவியும், மோகன் (35), அருள் (33) என 2 மகன்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்