பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். ஆட்டு இறைச்சியை குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.

Update: 2021-07-21 11:58 GMT
தேனி:

பக்ரீத் பண்டிகை

முஸ்லிம்கள், தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகையின் போது பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தி ஏழை, எளிய மக்களுக்கு இறைச்சியை குர்பானியாக கொடுப்பது வழக்கம். அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வழிபாட்டு தலங்களில் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால், கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது முஸ்லிம்கள் தங்களின் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.

 இந்த ஆண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

குர்பானி

தேனி பழைய பள்ளிவாசல் மற்றும் புதிய பள்ளிவாசல் ஆகிய இரு இடங்களிலும் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பள்ளிவாசல்களுக்கு பலரும் முக கவசம் அணிந்து வந்தனர்.

 பள்ளிவாசல்களிலும் இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டது. உலக அமைதிக்காகவும், உலக நன்மைக்காகவும் சிறப்பு தொழுகை நடத்தினர்.
தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். 

பின்னர் முஸ்லிம்கள் ஆட்டு இறைச்சியை ஏழை, எளிய மக்களுக்கு குர்பானியாக கொடுத்து மகிழ்ந்தனர். 

  கம்பம்

இதேபோல் கம்பத்தில் வாவேர்பள்ளி, மஸ்ஜிதே இலாஹி, மைதீன் ஆண்டவர் பள்ளி, அஸிசி பள்ளி, டவுன் பள்ளி, கவுதியா ஆகிய பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.

ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையையொட்டி, வனச்சரக அலுவலகம் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்கள் கூட்டுத்தொழுகை நடத்துவார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று மற்றும் மழையின் காரணமாக பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்துமாறு ஜமாத் கமிட்டியினர் அறிவிப்பு செய்தனர். 

அதன்படி நேற்று பக்ரீத் பண்டிகையொட்டி பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தும், சானிடைசர் பயன்படுத்தியும் தனித்தனி குழுக்களாக பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

தொழுகை முடிந்த பின்னர், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

---

மேலும் செய்திகள்