சி.எஸ்.ஐ.ஆலய போதகர் கைது

சி.எஸ்.ஐ.ஆலய போதகர் கைது

Update: 2021-07-21 15:06 GMT
சி.எஸ்.ஐ.ஆலய போதகர் கைது
கோவை

கோவை ரேஸ்கோர்சில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் சி.எஸ்.ஐ. திருமண்டல நிர்வாக குழு கூட்டம் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. 

அதில் ஒருவரை ஒருவர் தாக்கி கடும் மோதலில் ஈடுபட்டனர். அதில் தர்மபுரியை சேர்ந்த வக்கீல் நேச மெர்லின் (வயது 36) என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

 இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தாக்கப்பட்ட வக்கீல் நேச மெர்லின் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போதகர் சார்லஸ் சாம்ராஜ், சுதன் அப்பாதுரை, பாக்கியராஜ், டக் பொன்ராஜ், டேனியல், பரமானந்தம், என்.எஸ்.ஜேக்கப், டிஜின் பெர்னார்டு, நெல்சன், ஆலய போதகர் வில்சன் குமார் (48), விஜய், மேத்யூ,  ஜெயராஜ், ஜெ.பி.ஜேக்கப், அருள் பிரவீன் ஆகிய 15 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், கொலை மிரட்டல், தாக்குதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் சி.எஸ்.ஐ. ஆலய செயலாளர் ஜேக்கப் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நேச மெர்லின் மற்றும் அமிர்தம் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய திருப்பூர் செயின்ட் பால் சி.எஸ்.ஐ. ஆலய போதகர் வில்சன் குமார் என்பவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. தலைமறைவாக உள்ள சிலரை  போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்