புலி தாக்கி விவசாயி உயிரிழந்த விவகாரம்: ஆர்.டி.ஓ. நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு

புலிதாக்கி விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் ஆர்.டி.ஓ. நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்றுச்சென்றனர்.

Update: 2021-07-21 15:41 GMT
கூடலூர், 

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட ங்கன கொல்லி பகுதியை சேர்ந்த குஞ்சு கிருஷ்ணன் (வயது 52). விவசாயி. இவர் நேற்று முன்தினம் புலி தாக்கி உயிரிழந்தார். இதை கண்டித்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விவசாயி உடலை எடுக்க விடாமல் தடுத்தனர். இதை யடுத்து கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமையிலான அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாற்றிடம் வழங்கும் திட்டம், வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் உடலை எடுக்கவிடாமல் பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இரவு நேரமானதால் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்த விவசாயின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல கிராம மக்கள் அனுமதித்தனர்.

இந்த நிலையில் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தாசில்தார் சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு சசிகுமார், முதுமலை வனச்சரகர்கள் தயானந்தன், சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது ஆர்.டி.ஓ. கூறும்போது, முதுமலை மக்களுக்கான மாற்றிடம் வழங்கும் திட்டத்துக்கு விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். புலி தாக்கி உயிரிழந்த விவசாயியின் தாயாருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

இதை கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர். பின்னர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு விவசாயி குஞ்சு கிருஷ்ணனின் உடலை கிராம மக்கள் பெற்றுச் சென்றனர்.

இந்த நிலையில் புலி தாக்கி பலியான விவசாயி குஞ்சு கிருஷ்ணன் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வனச்சரகர்கள் தயானந்தன், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு முதற்கட்டமாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்