காட்டுயானை தாக்கி முதியவர் சாவு

மசினகுடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை காட்டுயானை துரத்தி கொன்றது.

Update: 2021-07-21 17:58 GMT
கூடலூர்,

மசினகுடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை காட்டுயானை துரத்தி கொன்றது.

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கடும் பனிமூட்டம்

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள மாவனல்லா பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ்(வயது 63). இவர் தினமும் காலையில் மசினகுடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். இதற்காக நேற்று காலை 6.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் மசினகுடிக்கு புறப்பட்டார். அப்போது சாரல் மழை பெய்ததோடு கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் போதிய வெளிச்சம் இல்லை.

காட்டுயானை தாக்கியது

அப்போது ஊட்டி-மசினகுடி சாலையோர புதர் மறைவில் இருந்து திடீரென காட்டுயானை ஒன்று ஓடி வந்தது. இதை எதிர்பாராத இருதயராஜ் மோட்டார் சைக்கிளை வேகமாக இயக்க முயன்றார். ஆனாலும் துரத்தி வந்த காட்டுயானை துதிக்கையால் அவரை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் கூச்சலிட்டார்.

சாவு

சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து காட்டுயானையை விரட்டியடித்தனர். பின்னர் உயிருக்கு போராடிய இருதயராஜை மீட்டு மசினகுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு முதலுதவிக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி இருதயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

பீதி

இதுகுறித்து தகவல் அறிந்த மசினகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மசினகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்