தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்

காட்டாத்துறை அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தம்பி மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-21 20:57 GMT
குலசேகரம்:
காட்டாத்துறை அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தம்பி மகனை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தொழிலாளி
காட்டாத்துறை அருகே செறுகோல் அப்பட்டுவிளையை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 57), தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் தம்பி கிருஷ்ணன் வசித்து வருகிறார். அவருடைய மகன் சுபாஷ் (27). இரு குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் ரெங்கசாமியுடன் சுபாஷ் தகராறு செய்து, ரெங்கசாமியை மண் ெ்வட்டியால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு உள்காயம் ஏற்பட்டது. அதன்பிறகு ரெங்கசாமி தனது வீட்டுக்கு சென்று படுத்து தூங்கினார்.
சாவு
மாலையில் ரெங்கசாமியை, அவருடைய மனைவி எழுப்பிய போது, அவர் எழவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ரெங்கசாமியை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ரெங்கசாமி இறந்து விட்டதாக கூறினார்கள்.
இதுபற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கொலை நடந்ததாக முதலில் தகவல்கள் கிடைத்தன. இறுதியில் சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெங்கசாமி உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பம்
அங்கு ரெங்கசாமி உடல் பிரேத பரிசோதனையில் அவர் திராவகம் குடித்து இறந்ததாக தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து தம்பி மகன் தன்னை தாக்கியதால் மன வேதனையடைந்த ரெங்கசாமி தற்கொலை செய்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து ரெங்கசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக சுபாஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்