காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ஆஸ்கர் பெர்னாண்டஸ் கவலைக்கிடம்

உடுப்பியை சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ஆஸ்கர் பெர்னாண்டஸ் தலையில் ரத்தம் உறைந்ததால் கோமா நிலையில் சிகிச்சை பெறுகிறார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவரது குடும்பத்தினரிடம் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் உடல் நலம் விசாரித்தனர்.

Update: 2021-07-21 21:03 GMT
மங்களூரு: உடுப்பியை சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ஆஸ்கர் பெர்னாண்டஸ் தலையில் ரத்தம் உறைந்ததால் கோமா நிலையில் சிகிச்சை பெறுகிறார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவரது குடும்பத்தினரிடம் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் உடல் நலம் விசாரித்தனர். 

ஆஸ்கர் பெர்னாண்டஸ்

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் அம்பலபாடியை சேர்ந்தவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் மத்திய மந்திரி ஆவார். 80 வயதான ஆஸ்கர் பெர்னாண்ட்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டில் யோகா செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். 

ஆனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. வழக்கம் போல் அன்று மாலை அவர் டயாலிசிஸ் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவரது தலையில் ரத்தம் உறைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 

தீவிர சிகிச்சை

இருப்பினும் அவர் கோமாவுக்கு சென்றார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உடுப்பி, மணிப்பாலை சேர்ந்த பிரபல டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் ஆஸ்கர் பெர்னாண்டசின் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு, அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். 

கண்ணீர்விட்ட ஜனார்த்தனபூஜாரி

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்கர் பெர்னாண்டசை பார்க்க காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜனார்த்தன பூஜாரி நேரில் சென்றார். அங்கு அவரது உடல் நலம் குறித்து டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். பின்னர் வெளியே வந்த ஜனார்த்தன பூஜாரி கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஆஸ்கர் பெர்னாண்டஸ் நல்ல மனிதர். அவர் என்னை சார்... சார்... என அழைத்து அன்போடு பேசி பழகுவார். அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார். இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்றார். 

மாநிலங்களவை உறுப்பினர்

ஆஸ்கர் பெர்னாண்டஸ், மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் மந்திரி சபையில் மந்திரியாக பணியாற்றி உள்ளார். தற்போது அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்