ரவுடியை கொன்ற வழக்கில் 2 ரவுடிகள், துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

பெங்களூருவில் வங்கிக்குள் புகுந்து ரவுடியை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது இந்த சம்பவம் நடந்திருந்தது.

Update: 2021-07-21 21:03 GMT
பெங்களூரு: பெங்களூருவில் வங்கிக்குள் புகுந்து ரவுடியை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது இந்த சம்பவம் நடந்திருந்தது.

வங்கிக்குள் புகுந்து கொலை

பெங்களூரு கோரமங்களா அருகே வசித்து வந்தவர் ஜோசப் என்ற பப்லு. ரவுடியான இவர், கடந்த 19-ந் தேதி மதியம் கோரமங்களா 8-வது பிளாக்கில் உள்ள வங்கிக்கு தனது மனைவியுடன் மோட்டார்சைக்கிளில் சென்றிருந்தார். அப்போது அங்கு மர்மநபர்கள், ஜோசப்பை கொலை செய்ய முயன்றனர். உடனே அவர் உயிரை காப்பாற்றி கொள்ள வங்கிக்குள் ஓடினார். ஆனாலும் மர்மநபர்கள் விடாமல் வங்கிக்குள் புகுந்து மனைவியின் கண்எதிரே ஜோசப்பை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தார்கள்.

இதுகுறித்து கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டது. ஜோசப்பை, 8 மர்மநபர்கள் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்து கொலை செய்திருந்தனர். வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலமாக மர்மநபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

போலீஸ் கமிஷனா் உத்தரவு

இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு பக்ரீத் பண்டிகையையொட்டி போலீஸ் கமிஷனர் கமல்பந்த், பெங்களூருவில் நகர்வலத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கோரமங்களா போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர், ரவுடி ஜோசப்பை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு, கமல்பந்த் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவில் இருந்தே கொலையாளிகளை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினார்கள்.

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் பேகூர் ஏரிப்பகுதியில் ஜோசப் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் ரவுடிகளான பிரதீப் மற்றும் ரவி ஆகிய 2 பேரும் பதுங்கி இருப்பது பற்றி கோரமங்களா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஏரியின் அருகே பதுங்கி இருந்த 2 பேரை, போலீசார் சுற்றி வளைத்தார்கள். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடிக்க முயன்றனர்.

ரவுடிகள் சுட்டுப்பிடிப்பு

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சித்தப்பா மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திராவை, ரவுடிகளான பிரதீப், ரவி தங்களிடம் இருந்த ஆயுதங்களால் தாக்கினார்கள். இதில், அவர்கள் 2 பேரின் கையிலும் பலத்தகாயம் ஏற்பட்டது. உடனே தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டுவிட்டு 2 ரவுடிகளையும் சரண் அடைந்துவிடும்படி இன்ஸ்பெக்டர் ரவி எச்சரித்தார். அவர்கள் 2 பேரும் சரண் அடைய மறுத்து விட்டனர். மாறாக இன்ஸ்பெக்டரை தாக்க முயனறதுடன், 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடுவதற்கு முயன்றனர்.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் புட்டசாமி தங்களிடம் இருந்த துப்பாக்கியால் ரவுடிகள் பிரதீப் மற்றும் ரவியை நோக்கி சுட்டார்கள். இதில், 2 பேரின் கால்களிலும் குண்டு துளைத்தது. இதனால் 2 பேரும் சுருண்டு விழுந்தனர். உடனே அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரதீப் மற்றும் ரவி அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6 பேருக்கு வலைவீச்சு

அதுபோல், படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சித்தப்பா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திராவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது பிரதீப் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், அவரது பெயர் அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளதும் தெரிந்தது. அதுபோல், ரவியின் பெயர் ஜே.சி.நகர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.
முதற்கட்ட விசாரணையில், பல ஆண்டுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் பழிதீர்க்கவும், முன்விரோதம் காரணமாகவும் ஜோசப்பை தீர்த்து கட்டி இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்