சென்னை விமான நிலைய சரக்ககத்தில் 6 மாதங்களில் 1½ லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை

சென்னை விமான நிலைய சரக்ககத்தில் கடந்த 6 மாதத்தில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 420 டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-07-21 23:15 GMT
ஆலந்தூர்,

கொரோனா தொற்று காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு பயணிகள் போக்குவரத்து முடக்கப்பட்டு சில நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு விமான நிலையத்தில் 2-வது அலை குறைந்த நிலையில் தற்போது உள்நாட்டு பயணிகள் விமான சேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கக பகுதி ஓய்வே இல்லாமல் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வழக்கமாக இறக்குமதியாகும் பொருட்களுடன் ஆக்சிஜன் செறியூட்டிகள், சிலிண்டா்கள், வென்டிலேட்டா்கள், தொ்மல் ஸ்கேனா்கள், முக கவசங்கள் உள்பட மருத்துவ பொருட்களும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.

வெளிநாடுகளில் இருந்து பொருட்களை சென்னைக்கு கொண்டு வருவதில் வெளிநாட்டு விமானங்கள் மட்டுமின்றி நமது இந்திய விமானப்படை விமானங்களும் ஈடுபட்டு உள்ளன.

ஏற்றுமதி

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட தோல் பொருட்கள், மீன், நண்டு, காய்கறிகள், பழங்கள் உள்பட உணவு பொருட்கள், மலா்கள், தாவர வகைகளும் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மேற்குவங்காளம், அந்தமான் போன்ற இடங்களில் இருந்து பொருட்களை உள்நாட்டு விமானங்களில் சென்னைக்கு கொண்டு வந்து இங்கிருந்து சரக்கு விமானங்களில் இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதனால் சென்னை விமான நிலையத்தின் சரக்கக பகுதியில் ஏற்றுமதி, இறக்குமதி ஆகிய இரு பிரிவுகளிலும் ஓய்வின்றி பணிகள் நடக்கின்றன.

புதிய சாதனை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்ககம் ஏற்றுமதி, இறக்குமதியில் புதிய சாதனை படைத்து உள்ளது. கொரோனா 2-வது அலை தமிழகத்தில் கோரதாண்டவம் ஆடிய நிலையிலும் இந்த ஆண்டில் முதல் 6 மாதங்களில் சென்னை விமான நிலைய சரக்ககம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 420 டன் சரக்குகளை கையாண்டு இந்தியாவில் சிறந்த சரக்ககமாக உருவெடுத்து உள்ளது.

கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்களோடு ஒப்பிடுகையில் இது சுமாா் 20 சதவீதம் அதிகம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் 6 மாதங்களின் கடைசி 3 மாதங்களில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதேநிலை நீடித்தால் அடுத்து வரும் 6 மாதங்களில் ஏற்றுமதி, இறக்குமதி மேலும் அதிகரித்து இந்திய அளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்ககம் சாதணை படைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்