திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2021-07-22 14:02 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 

 போக்குவரத்து நெரிசல்

திருவண்ணாமலை நகரத்திற்கு உட்பட்ட சின்னக்கடை வீதி, மாடவீதி, கடலைக்கடை மூலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. 

இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர். 

அதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதில், 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. காந்தி சிலையில் இருந்து மாட வீதியில் ஒரு குழுவும், சின்னக்கடை வீதியில் ஒரு குழுவும் ஈடுபட்டனர். 

அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த பெட்டிக்கடைகள், கடைகளின் முன்பு இருந்த தகர சீட்டுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. 

சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பொருட்களும் அகற்றப்பட்டு லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.

 எச்சரிக்கை

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னரே கடைகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தகரசீட்டு போன்றவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதனால் கடை உரிமையாளர்கள் சிலர் தங்கள் கடைகளின் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தகரசீட், சாலையோரம் இருந்த விளம்பர பேனர்கள், பெட்டி கடைகள் ஆகியவற்றை அகற்றினர். 

சில கடைக்காரர்கள் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டால் நாங்கள் என்ன செய்வோம் என்று புலம்பினர். இதனால் நேற்று திருவண்ணாமலையில் பரபரப்பாக காணப்பட்டது. 

 பொதுமக்கள் வேண்டுகோள்

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், சாலை விரிவாக்கம் செய்வதற்காகவும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. 

இதுபோன்று தொடர்ந்து அவ்வப்போது அக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றனர். அதுமட்டுமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பெயரளவில் இல்லாமல் அடிக்கடி நடைபெற வேண்டும் என்று பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்