2 தெருக்களில் மட்டும் 163 வீடுகள் ஆக்கிரமிப்பு

சிதம்பரத்தில் 2 தெருக்களில் மட்டும் 163 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் அளவிட்டபோது வருவாய்த்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2021-07-22 16:55 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. முதற்கட்டமாக ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்ய வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி சிதம்பரம் தாசில்தார் ஆனந்த் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று காலை சிதம்பரம் அம்பேத்கர் நகர், நேரு நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தனர். இந்த 2 தெருக்களில் பாலமான், கான்சாகிப் வாய்க்கால் ஓடுவதால் ஆக்கிரமிப்பும் அதிகமாக இருந்தது. 

163 வீடுகள் ஆக்கிரமிப்பு 

அதாவது நீர்நிலையை ஆக்கிரமித்து நேரு நகரில் 69 வீடுகளும், அம்பேத்கர் நகரில் 94 வீடுகளும் கட்டியிருப்பதை கண்டு வருவாய்த்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் மொத்தம் 163 வீடுகள் குடிசை வீடுகளாகவும், மாடி வீடுகளாகவும் இருந்தன. அதுமட்டுமின்றி நகராட்சி கழிப்பிடமும், அங்காளம்மன் கோவிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. 
ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தபோது சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையில் 100-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதேபோல் சிதம்பரம் நகரம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்வோம். ஆக்கிரமிப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி வைப்போம். உயர் அதிகாரிகள் உத்தரவின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றனர். 

மேலும் செய்திகள்