2 பேருக்கு ஆயுள் தண்டனை

பணம் கொடுக்கல்வாங்கல் தகராறில் பனியன் வியாபாரியை அடித்து கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-07-22 17:11 GMT
திருப்பூர்
பணம் கொடுக்கல்வாங்கல் தகராறில் பனியன் வியாபாரியை அடித்து கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
பனியன் வியாபாரம்
திருப்பூர் கே.வி.ஆர். நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அப்பகுதியில் பனியன் செகண்ட்ஸ் வியாபாரம் செய்து வந்தார். இவரிடம் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஜார்ஜ் என்ற லட்சுமணன் வயது 50 என்பவர் செகண்ட்ஸ் பனியன் வாங்கி வியாபாரம் செய்தார். இதில் பாண்டியனுக்கு, ஜார்ஜ் ரூ.1500 கொடுக்க வேண்டியிருந்தது.
இதுகுறித்து பாண்டியன் தனது நண்பர்களான கே.வி.ஆர். நகரைச் சேர்ந்த மாணிக்கம் 47 மாரிமுத்து37 ஆகியோரிடம் கூறினார்.
சுத்தியலால் அடித்துக்கொலை
கடந்த 5.5.2017 அன்று இரவு 7 மணி அளவில் கே.வி.ஆர். நகரிலுள்ள ஒரு ஒர்க் ஷாப் அருகில் ஜார்ஜ் நின்றிருந்தார். அப்போது அங்கு சென்ற மாணிக்கம், மாரிமுத்து ஆகியோர் பாண்டியனுக்கு கொடுக்க வேண்டிய பணம் குறித்து அவரிடம் கேட்டு தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணிக்கம், மாரிமுத்து இருவரும் சேர்ந்து சுத்தியலால் ஜார்ஜின் தலையில் அடித்துள்ளனர். இதில் அவர்  காயமடைந்து இறந்தார்.
இது தொடர்பாக திருப்பூர் மத்திய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மாணிக்கம், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்த விசாரணை திருப்பூர் 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
2 பேருக்கு ஆயுள் தண்டனை
வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, கொலை குற்றத்திற்காக மாணிக்கம், மாரிமுத்து ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் முருகேசன்ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்