கொட்டும் மழையிலும் வரிசையில் காத்திருந்த மக்கள்

ஊட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்த கொட்டும் மழையிலும் வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அப்போது டோக்கன் கேட்டு வாக்குவாதம் செய்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-22 17:56 GMT
ஊட்டி,

ஊட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்த கொட்டும் மழையிலும் வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அப்போது டோக்கன் கேட்டு வாக்குவாதம் செய்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கப்படும் அளவை பொறுத்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 ஆயிரத்துக்கும் மேல் கோவிஷூல்டு தடுப்பூசி ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 4 நகராட்சிகள், 4 வட்டாரங்கள், பேரூராட்சிகள் என பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

ஊட்டி நகராட்சியில் பிரீக்ஸ் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக்கல்லூரியில் தலா 500 டோஸ்கள் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக ஓல்டு ஊட்டி, சர்ச்ஹில் ஆகிய 2 பகுதி பொதுமக்களுக்கு 600 டோக்கன்கள் வழங்கப்பட்டு இருந்தது. டோக்கன் பெற்றவர்கள் நேற்று காலை முதலே மையங்களுக்கு வந்தனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அவர்கள் குடைகளை பிடித்தபடி நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

வாக்குவாதம்

அப்போது டோக்கன் பெறாமல் வந்தவர்களை சுகாதார பணியாளர்கள் திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒரு அரங்கில் டோக்கன் வழங்கப்பட்டது. முதலில் 200 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. அதற்கு பின்னால் வந்தவர்கள் தங்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும் என்றனர். வார்டு, வாரியாக டோக்கன் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், அவர்கள் டோக்கன் தராவிட்டால் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று அதிகாரிகளை முற்றுகையிட்டு அங்கேயே இருக்கைகளில் அமர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, 36 வார்களில் எந்த இடங்களில் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று உறுதி அளிக்கப்பட்டது.

தொற்று பரவும் அபாயம்

கொரோனா தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றதால் மழையின் நடுவே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதன் பின்னர் போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதால் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். மையங்களில் டோக்கன் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டாலும் டோக்கன் பெறுவதற்காக பலர் வருகின்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

மேலும் செய்திகள்