விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

உதவித்தொகை வழங்கக்கோரி விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2021-07-22 18:59 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து திடீரென அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாமை உடனடியாக நடத்த வேண்டும், மாதாந்திர உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக உத்தரவு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

நடவடிக்கை

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் முருகன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை சமாதானப்படுத்தினர். 
அதன் பிறகு மாற்றுத்திறனாளிகள் சிலர், மாவட்ட கலெக்டர் டி.மோகனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்