புதிய பழப்பயிர், காய்கறி சாகுபடிக்கு அரசு மானியம்- தோட்டக்கலைத்துறை தகவல்

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் புதிய பழப்பயிர் மற்றும் காய்கறி சாகுபடி செய்ய அரசு மானியம் வழங்குகிறது.

Update: 2021-07-22 19:12 GMT
திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் புதிய பழப்பயிர் மற்றும் காய்கறி சாகுபடி செய்ய அரசு மானியம் வழங்குகிறது.

1.60 கோடி நிதி ஒதுக்கீடு

திருச்சி மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டு அரிய பழங்களான அத்தி, லிச்சி, டிராகன் பழ சாகுபடி, மா மற்றும் கொய்யா அடர் நடவு, எலுமிச்சை, பப்பாளி, திசு வாழை மற்றும் வீரிய காய்கறி சாகுபடி பரப்பு விரிவாக்கத்தில் மிளகாய், கத்தரி மற்றும் தக்காளி குழித்தட்டு நாற்றுகள் வினியோகம், உதிரி மலர்களாகிய மல்லிகை, கிழங்கு வகை மலர்களாகிய சம்பங்கி பரப்பு விரிவாக்கம் ஆகிய இனங்களுக்கு மானியம் வழங்க ரூ.1 கோடியே 60 லட்சத்து 91 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. 

தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முருங்கை, வெங்காயம், வெப்ப மண்டல சிறு பழப்பயிர்களான அத்தி, புளி, நெல்லி, பப்பாளி கோ -8, மணத்தக்காளி கீரை கோ 1 மற்றும் புடலை பி.எல்.ஆர் - 2 போன்ற ரகங்களை சாகுபடி செய்ய மானியம் பெறப்பட்டுள்ளது.

எக்ேடருக்கு ரூ.2 லட்சம் மானியம்
பந்தல் முறையில் சாகுபடி செய்யும் காய்கறி பயிர்களுக்கு எக்ேடருக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. இயற்கை முறையில் சாகுபடி செய்யும் காய்கறி பயிர்களுக்கு மானியமாக ரூ.5 ஆயிரம் எக்ேடருக்கு வழங்கப்படுகிறது. 
இதில் இயற்கை முறை சாகுபடியில் சான்று பெற்ற விவசாயிகள், புதிதாக இயற்கை முறை சாகுபடி செய்யும் விவசாயிகளும், சென்ற ஆண்டு இயற்கை முறையில் ஊக்க தொகை பெற்ற விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் நிர்ணயம்

மேலும் விவசாயிகள் தனியாகவும், விவசாய குழுக்கள் மூலமும் பதிவு கட்டணங்களை செலுத்தி பயன்பெறலாம். சிறு மற்றும் குறு விவசாயிகள் எனில் ரூ.2,700-ம் இதர விவசாயிகளுக்கு ரூ.3,200-ம் குழு மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு குழுவுக்கு ரூ.7,200-ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவும் அல்லது தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அல்லது நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம்.
இந்த தகவலை திருச்சி தோட்டக்கலை துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்