ஏ.சி. அறையில் கொசுவை விரட்ட புகை மூட்டம்; பாட்டி-பேரன் மூச்சுத்திணறி சாவு - 2 பேர் கவலைக்கிடம்

ஏ.சி. அறையில் கொசுவை விரட்ட போடப்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி பாட்டி, பேரன் பரிதாபமாக இறந்தனர். மேலும் தந்தை, மகள் இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பல்லாவரம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2021-07-23 06:15 GMT
தாம்பரம், 

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பொன்னி நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம்(வயது 61). இவர், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், தன்னுடைய மனைவி புஷ்பலட்சுமி(55), மகள் மல்லிகா(38), அவருடைய மகனான விஷால்(11) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் கொசுவை விரட்ட வீட்டினுள் ஒரு தட்டில் அடுப்பு கரியை போட்டு அதில் தீ வைத்தனர். இதில் வீடு முழுவதும் புகை மூட்டம் பரவியதால் கொசு தொல்லை குறைந்தது.

பின்னர் அவர்கள் அனைவரும் தட்டில் எரிந்த தீயை அணைக்காமல் அந்த அறையில் இருந்த ஏ.சி.யை ஆன் செய்துவிட்டு தூங்கி விட்டனர். சிறிது நேரத்தில் அடுப்பு கரியில் இருந்து புகை மூட்டம் வந்தது. கதவுகள் அடைக்கப்பட்டதால் புகை மூட்டம் வெளியே கலைந்து செல்ல முடியாமல் அறையிலேயே சூழ்ந்து நின்றது. இதில் அங்கு படுத்து தூங்கிய 4 பேரும் மூச்சுத்திணறி படுக்கையிலேயே மயங்கினர்.

நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் சொக்கலிங்கம் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு வசிக்கும் சீதா என்பவர், அதே பகுதியில் வசிக்கும் சொக்கலிங்கத்தின் மகன் வேலுவுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனது தாய், தந்தை உள்பட 4 பேரும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 4 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றார்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் புஷ்பலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. மேலும் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருடைய பேரன் விஷாலும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும் சொக்கலிங்கம், அவருடைய மகள் மல்லிகா இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தந்தை-மகள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொசுவை விரட்ட போடப்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி பாட்டி-பேரன் பலியானதுடன், தந்தை, மகள் இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்