தொடர் மழை எதிரொலி முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 131.5அடியாக உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 131½ அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2021-07-23 15:57 GMT

கூடலூர்:
தேனி மாவட்டத்தின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணை மூலம் பாசன வசதி பெறும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தாமரைக்குளம், ஒட்டன்குளம் பகுதியில் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் மூலம் நெல் நடவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த சில வாரங்களாக கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. மேலும் முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 
ஒரே நாளில் 1¼ அடி உயர்வு
முல்லைப்பெரியாற்றில் நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 1,315 கனஅடியாகவும், நீர்மட்டம் 130¼ அடியாகவும் இருந்தது. இந்தநிலையில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 294 கனஅடியாக அதிகரித்ததன் எதிரொலியாக நீர்மட்டம் 131½ அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் நீர்மட்டம் 1¼ அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி  தண்ணீர் திறந்து விடப்படுகிறது அணையில் 5ஆயிரத்து 48 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
நேற்று முன்தினம் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாற்றில் 85.8 மி.மீ., தேக்கடியில் 47 மி.மீ. மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்