புகையிலை பொருட்கள் கடத்துபவர்கள், விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

புகையிலை பொருட்கள் கடத்துபவர்கள், விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Update: 2021-07-23 18:35 GMT
கரூர்
கரூர்
கரூர் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கரூரில் நடைபெற்றது. இதற்கு திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் வரவேற்றார். பின்னர் நிருபர்களிடம் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
 கரூர் பகுதியில் போலீஸ் சிறார் மன்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கும், இந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு மேற்கொண்டு படிப்பதற்கும், வேலைவாய்ப்பை பெறுவதற்குமான வழிகாட்டிதலை ஏற்படுத்துவதற்கும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய மண்டலத்தில் தாய் கிராமங்கள் தோறும் போலீஸ் சைபர் கிளப் என்ற பெயரில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், கல்லூரிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் சைபர் கிளப் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குழந்தை திருமணங்களை தடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிறுவர்களுக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில் விற்பனை செய்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடைகளின் லைசைன்சை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். புகையிலை பொருட்கள் பெங்களூருவில் இருந்து வருவதாக தகவல் வருகிறது. அதனை யார் சப்ளை செய்கிறார்கள் என்று கண்டுபிடித்து மொத்த வியாபாரிகள், கடத்தி வரக்கூடிய வாகனங்கள், யார் அதற்கு பின்புலமாக இருக்கிறார்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் குற்ற வழக்குப்பதிவு செய்வது மட்டுமில்லாமல் அவர்கள் மீது சட்டரீதியாக பொருளாதார அடிப்படையிலும் நடவடிக்கைகள் எடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்