ஆடிமாத முதல் வெள்ளியை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனை தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2021-07-23 19:22 GMT

சமயபுரம், 
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனை தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

மாரியம்மன் கோவில்

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதாலும், பவுர்ணமி என்பதாலும் காலையிலிருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்தனர்.
அவர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் முடிகாணிக்கை செலுத்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து சென்றும், கோவில் முன் பகுதியில் தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.

நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள்

தொடர்ந்து, அவர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து வருகின்றனரா என்று ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன் உத்தரவின்படி, பேரூராட்சி பணியாளர்கள் சமயபுரம் நுழைவு வாயிலிலேயே கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூகவிரோதிகள் செயின்பறிப்பு, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுகின்றனரா என்று சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், குமரேசன் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஏராளமானோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

ஆதிமாரியம்மன்

இதேபோன்று, இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில், மாகாளிகுடியிலுள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்