வீட்டில் பதுக்கி வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சு

வேடசந்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சிடம் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து 95 டோஸ் மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-07-25 15:29 GMT
வேடசந்தூர்: 

அரசு மருத்துவமனை நர்சு
வேடசந்தூர் அய்யனார் கோவில் அருகே வசிப்பவர் தனலட்சுமி (வயது 58). இவர், கரூர் கஸ்தூரிபாய் தாய்சேய் நல அரசு மருத்துவ மனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது வீட்டில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக சுகாதாரத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


இதையடுத்து அவருடைய வீட்டுக்கு, எரியோடு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் டாக்டர் பொன்.மகேஸ்வரி தலைமையில் டாக்டர்கள் சுரேன், அருண் ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் நேற்று சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

95 டோஸ் மருந்து பறிமுதல்
அப்போது அவருடைய வீட்டில் கோவேக்சின், 95 டோஸ் தடுப்பூசி மருந்து பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அதனை மருத்துவ குழுவினர் பறிமுதல் செய்து தனலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். 
அதில், உறவினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு 2 டோஸ் மருந்தை மருத்துவமனையில் கேட்டு வாங்கி வந்ததாகவும், மற்ற டோஸ்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்ததாகவும் அவர் கூறினார். 


மேலும் இதுவரை 20 பேருக்கு தடுப்பூசி செலுத்தி இருப்பதும், அவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை அறிய சுகாதாரத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 போலீசில் புகார்
இதுகுறித்து வட்டார மருத்துவரிடம் கேட்டபோது, கொரோனா தடுப்பூசிகளை மருத்துவமனை அல்லது மருத்துவ முகாம்களில் தான் செலுத்த வேண்டும். வீட்டில் வைத்து தடுப்பூசி செலுத்துவதாக வந்த புகாரின்பேரில் நர்சு தனலட்சுமி வீட்டில் சோதனை நடத்தினோம். 

அவருடைய வீட்டில் பதுக்கி வைத்திருந்த தடுப்பூசிகளை பறிமுதல் செய்துள்ளோம். இதுகுறித்து திண்டுக்கல், கரூர் மாவட்ட மருத்துவத்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றார்.

இந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தனலட்சுமி மீது போலீசில் புகார் செய்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்று மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்