திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-07-25 15:46 GMT
திருவண்ணாமலை

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். 

கோவில் பின்பக்கம் உள்ள மலையைச் சுற்றி பவுர்ணமி உள்பட விசேஷ நாட்களில் பக்தா்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமையான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் நேற்று பக்தர்கள் பலர் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்பக்கம் உள்ள மலையை சுற்றி தனித்தனியாக கிரிவலம் சென்றனர். 

பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தரிசன கவுண்ட்டர்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்