வேலூரில் 2 ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.

Update: 2021-07-26 13:47 GMT
வேலூர்
காவலர் பணியிடம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பாக 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10,906 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி நடந்தது. இதையடுத்து உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி முதல் ஏப்ரல் 28-ந் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கொரோனா 2-ம்அலை அதிகமாக பரவியதால் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 80 பேர் கலந்து கொள்ள உள்ளனர். அதில் 2 ஆயிரத்து 393 ஆண்களும், 687 பெண்களும் உள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு

இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. முதல் நாளான நேற்று 500 பேருக்கு அழைப்புக் கடிதம் விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பு கடிதம் பெற்றவர்கள் அதிகாலையிலேயே நேதாஜி மைதானத்திற்கு வந்தனர். அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டனர்.

அதன்படி நேதாஜி மைதானத்தின் நுழைவு வாயிலில் கொரோனா பரிசோதனை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்களுடைய கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து உயரம் மற்றும் எடை அளவிடுதல், ஓட்டம் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வுகள் நடந்தன. 

போலீஸ் பாதுகாப்பு

வேலூர் சரக டி.ஐ.ஜி.பாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற உடற்திறன் தேர்வுகள் நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

காவலர் தேர்வு நடப்பதால் அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. நேதாஜி மைதானத்தில் மற்றவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்