50 ஆண்டு பழமையான மரம் வேரோடு சாய்ந்தது திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து மாற்றம்

பேரளத்தில் நேற்று காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக 50 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

Update: 2021-07-26 15:39 GMT
நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் பேரளம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. 45 நிமிடங்கள் மழை நீடித்தது. பேரளம் பகுதியில் காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக போலீஸ் நிலையம் எதிரே இருந்த 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலுப்பை மரம் வேரோடு சாய்ந்தது.

இதனால் திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ேபாலீசார் பேரளம் ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை மாற்று வழியில் இயக்க செய்து, போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர். பேரளம் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த இலுப்பை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக 2 மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

மேட்டூரில் இருந்து கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து கல்லணை 16-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் நேரடி விதைப்பு செய்வதையே விரும்புகின்றனர்.

பெரும்பாலான விவசாயிகள் நேரடி விதைப்பு செய்யும் வகையில் கோடை உழவு செய்ய மழைக்காக காத்திருக்கும் நிலையில் நேற்று பரவலாக மழை பெய்ததால் நன்னிலம், பேரளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல் திருவாரூர் மாவட்டம் வடுவூரில் நேற்று மாலை 4 மணி முதல் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக 2 மணி நேரத்துக்கு மின் வினியோகம் தடை செய்யப்பட்டு இருந்தது. மழையால், வெப்பத்தின் தாக்கம் தணிந்தது. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த திடீர் மழையினால் மகிழ்ச்சி அடைந்தனர்.

நீடாமங்கலம் பகுதியில் நேற்று மதியம் முதல் பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்