ஜோலார்பேட்டை அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு கிராம மக்கள் சாலை மறியல்

ஜோலார்பேட்டை அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-26 16:53 GMT
ஜோலார்பேட்டை

குடிநீர் வரவில்லை என புகார்

ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். அவர் மீது பல புகார்கள் எழுந்தன. அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் பல முறை சாலை மறியல் நடந்துள்ளது. தெரு விளக்கு வசதி, குடிநீர் வசதி கேட்டு பலமுறை ஊராட்சி செயலர் பிரபுவிடம் புகார் அளித்துள்ளனர்.

அதேபோல் நேற்றும் கிராம மக்கள் புகார் செய்தனர். அதற்கு அவர், செவி சாய்க்காமல் இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மங்குண்டுவின் மகன் கார்த்திக் (வயது 36), பிரவுவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு எங்கள் பகுதியில் சரிவர குடிநீர் வரவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு பிரபு, கார்த்தியை ஆபாசமாக பேசி திட்டி உள்ளார். 

போலீசார் பேச்சு வார்த்தை

இதுகுறித்து கார்த்திக், ஊர் பெரியோர்களிடம் கூறினார். குடிநீர் வசதி குறித்து புகார் செய்ததற்கு ஆபாசமாக பேசி திட்டிய ஊராட்சி செயலர் பிரபுவை கண்டித்தும், அவரை பணி நீக்கம் செய்யும் வரை போராட்டம் நடத்தப்படும் எனச் சுவரொட்டியை ஒட்டினர். அது மட்டுமின்றி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டும், ஊராட்சி செயலரை மாற்றக்கோரியும் ஆசிரியர் நகர் புதுப்பேட்டை செல்லும் சாலையில் அச்சமங்கலம் பகுதியில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கிறோம், ஊராட்சி செயலர் பிரபுவை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கிறோம் என கூறியதும் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்