தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ்காரரின் மனைவி தீக்குளிக்க முயற்சி

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ்காரரின் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-07-26 16:53 GMT
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ்காரரின் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் மனுக்களை போட்டனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு தனது பெண் குழந்தை மற்றும் பெற்றோருடன் வந்த ஒரு இளம்பெண் திடீரென தனது உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அந்த இளம்பெண் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் தர்மபுரி அருகே உள்ள செங்கல்மேடு கிராமத்தை சேர்ந்த திவ்யா (வயது 21) என்பதும், இவருடைய கணவர் கோவையில் போலீஸ்காரராக பணி புரிவதும்தெரியவந்தது.
துன்புறுத்தல்
தனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கணவரும், அவருடைய உறவினர்கள் சிலரும் சேர்ந்து கொண்டு, பெற்றோரிடம் கூடுதலாக நகை மற்றும் பணம் வாங்கி வந்தால் தான் சேர்ந்து வாழ முடியும் எனக்கூறி துன்புறுத்தியதாகவும், இதனால் மனம் உடைந்து தீக்குளிக்க முயன்றதாகவும் திவ்யா போலீசாரிடம் கூறினார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ்காரரின் மனைவி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்