கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியை பலப்படுத்த கரையோரம் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

தஞ்சை அருகே உள்ள கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியை பலப்படுத்த கரையோரம் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

Update: 2021-07-26 17:24 GMT
வல்லம், 

தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரி 650 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் சுமார் 8,000 ஏக்கர் விளைநிலங்கள் சாகுபடி வசதி பெற்று வருகிறது. கள்ளப்பெரம்பூர், சக்கரசாமந்தம், தென்னங்குடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு கள்ளப்பெரம்பூர் ஏரி நீர் உறுதுணையாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்த ஏரி தூர்வாரப்படாத நிலையில் விவசாயிகள் பங்களிப்புடன் கடந்த 2 ஆண்டுகளாக கிராம மக்கள் நிதி திரட்டி குடிமராமத்து திட்டம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் ஏரியின் கரைகளை பலப்படுத்தும் விதமாக வெட்டிவேர் பதிக்கும் பணியும், நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் வகையில் அணைகளின் இருபுறமும் பனை விதைகள் நடப்பட்டது. மேலும் பறவைகள், விலங்குகள் பயனடையும் வகையில் பழம் தரும் மரக்கன்றுகளை நடும் பணியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடங்கினார். 5ஆயிரம் பனை விதைகள் மற்றும் 5ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு கிராம இளைஞர்கள், விவசாயிகள் ஒருங்கிணைந்து இப்பணியை தொடங்கினர். இதில் ஏரி சீரமைப்பு குழு தலைவர் குலோத்துங்கன், எக்ஸ்னோரா அமைப்பு தலைவர் செந்தூர் பாரி, சமவெளி பாதுகாப்பு இயக்க தலைவர் பழனிராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உதயன், ஊராட்சி தலைவர்கள், ஏரி பாசன விவசாயிகள் குழு ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், தன்னார்வலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்