சீருடை பணியாளர்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது

கடலூரில் சீருடை பணியாளர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 397 பேர் பங்கேற்றனர்.

Update: 2021-07-26 18:15 GMT
கடலூர், 

தமிழ்நாடு சீருடை  பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் கடந்த 2020-21-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு,  உடற் தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 2,748 ஆண்கள், 1,045 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 3,794 தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு,  உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது.

செல்போனுக்கு தடை

இதில் கலந்து கொள்ள 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 397 பேர் மட்டுமே நேற்று நடந்த உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். மேலும் முக கவசம் அணிந்து வந்தவர்களும், ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, அசல் சான்றிதழ்களுடன் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். செல்போன் கொண்டு வர தடை செய்யப்பட்டது. 
இதையடுத்து 397 பேரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டது. பின்னர் அனைவரது உயரமும் சரிபார்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து மார்பளவு சரிபார்த்தல், 1,500 மீட்டர் ஓட்டம் நடந்தது. இந்த இலக்கை 7 நிமிடத்திற்குள் எட்டிப்பிடிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

309 பேர் தகுதி

இதில் 309 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு அடுத்தகட்டமாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந் தேதி முதல் உடல்திறன் தேர்வு நடைபெறும். இந்த உடற்தகுதி தேர்வை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் பார்வையிட்டார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இந்த உடற்தகுதி தேர்வு வருகிற 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்