மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 34,144 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Update: 2021-07-26 19:29 GMT
மேட்டூர்
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 34,144 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது.
இந்த நீர்வரத்து தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 665 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது நேற்று காலை வினாடிக்கு 34 ஆயிரத்து 144 கனஅடியாக அதிகரித்தது.
ஒரே நாளில் 2 அடி உயர்வு
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று இரவு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. தண்ணீர் திறப்பைவிட, நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது.
நேற்று முன்தினம் காலை 73.27 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், படிப்படியாக உயர்ந்து நேற்று காலை 75.34 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து இதே நிலையில் தொடர்ந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்