தோவாளை தாலுகா அலுவலகத்தை பஞ்சாயத்து தலைவர்கள் முற்றுகை

தோவாளை தாலுகா அலுவலகத்தை 13 பஞ்சாயத்து தலைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-26 19:54 GMT
அழகியபாண்டியபுரம், 
தோவாளை தாலுகா அலுவலகத்தை 13 பஞ்சாயத்து தலைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெம்போ பறிமுதல்
தோவாளை தாசில்தார் தாஜ் நிஷா, நாவல்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக மண் ஏற்றி வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்தார். அதில், மண் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து டெம்போ மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் அவர், அலுவலகம் சென்று விட்டார்.
முற்றுகை போராட்டம்
தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் நாவல்காடு மற்றும் ஈசாந்திமங்கலம் முதல் ஞானதாஸ்புரம் வரை சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிக்காக கனரக வாகனங்கள் அங்கு செல்ல முடியாததால், அந்த டெம்போவும், பொக்லைன் எந்திரமும் பயன் படுத்தப்படுவதாகவும், எனவே, அவற்றை விடுவிக்க வேண்டும் என தாசில்தாரிடம், தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி கூறியதாக தெரிகிறது. ஆனால், வாகனத்துகான அனுமதி சீட்டு இல்லாததால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. 
இதுபற்றி தகவல் அறிந்த ஞாலம் பஞ்சாயத்து தலைவரும், தோவாளை பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவருமான சதீஷ் தலைமையில் செயலாளரும், சகாயநகர் பஞ்சாயத்து தலைவர் மகேஷ் ஏஞ்சல் முன்னிலையில் அருமநல்லூர், ஈசாந்திமங்கலம், தடிக்காரன்கோணம் உள்பட 13 பஞ்சாயத்து தலைவர்கள் தோவாளை தாலுகா அலுவலகம் முன் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  
 விடுவிக்கப்பட்டது
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி தீவிர விசாரணை நடத்தி, எழுத்து பூர்வமாக தாசில்தாருக்கு கடிதம் அனுப்பினார். அதைதொடர்ந்து தாசில்தார், பூதப்பாண்டி போலீசாருக்கு கடிதம் மூலம் தகவல் கொடுத்ததை தெடர்ந்து வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. 
இதையடுத்து பஞ்சாயத்து தலைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்